
திருவண்ணாமலை: நவம்பர் 24-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெற்றது. அண்ணாமலையார் சந்நிதி எதிரேயுள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைக்க, இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களிலேயே கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும்..
அந்தவகையில், இந்த வருடத்துக்கான கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக ஆரம்பமாகின. இதற்காக திருக்கோயில் பராமரிப்பு, பஞ்ச ரதங்கள் சீரமைப்பு பணி செய்தல் போன்ற பணிகள் துரிதமாக நடந்தது.. அம்மன் தேர் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு கடந்த 14ம்தேதி இதற்கான வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது.
தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் சீரமைக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வசதிக்காக அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
அதேபோல பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன..
ந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகிறார்கள்..
விழாவின் சிகர நிகழ்ச்சி 10ம் நாளில் நடைபெறும்.. அந்தவகையில, வருகிற 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,688 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. சிறப்பு ரயில், பஸ்கள் இதனிடையே, தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் மொத்தம் 4,764 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. தீபத் திருவிழா பாதுகாப்பிற்காக சுமார் 15 ஆயிரம் போலீசார் மற்றும் 430 தீயணைப்பு வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.. மேலும், கிரிவல பாதை மற்றும் மாட வீதி உள்ளிட்ட பல இடங்களில் 24 கண்காணிப்பு கோபுரங்கள், 61 போலீஸ் உதவி மையங்கள், 454 அறிவிப்பு மையங்கள், 1060 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.. அதேபோல திருவண்ணாமலைக்கு ஏற்கனவே 16 ரெயில்கள் இயக்கப்படும் நிலையில், தீபத்தை முன்னிட்டு 16 சிறப்பு ரெயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

















