
திருவள்ளூர்: செப். 7-
திருவள்ளூர் அருகே ரூ.12.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்திய வாகனத்துடன் உடைந்த ஏடிஎம் இயந்திரத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையத்தில் இந்த சம்பவம் நடந்தது.
பூந்தமல்லி காவல் துறையினர், வெள்ளவேடு போலீசார் ஏடிஎம் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் இயந்திரத்துடன் ஆம்னி வேனில் தப்பிச் சென்றது தெரியவந்தது.
கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சத்திரம் அருகே கிருஷ்ணா கால்வாய் கரையில் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம் கிடைத்ததை பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தண்டலம் அருகே கும்பல் பயன்படுத்திய ஆம்னி வேன் கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் ஆம்னி வேனை அங்கு நிறுத்திவிட்டு தனித்தனி இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. எனவே, இருசக்கர வாகனங்களின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்.












