
புதுடெல்லி, ஏப்ரல் 29- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் சரிவுக்கு, முந்தைய போட்டியின் தாக்கத்தால் ஏற்பட்ட தயக்கம் மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவையே காரணம் என்று கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணி தொடக்கத்தில் 8 ரன்களுக்கு 6 விக்கெட்களை தாரை வார்த்ததால் சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. 76 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் டெல்லி அணி 5-வது தோல்வியை பதிவு செய்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான படுதோல்விக்கு பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது: கடந்த போட்டியில் (பஞ்சாப் அணிக்கு எதிராக 264 ரன்கள் குவித்த போதிலும் டெல்லி அணி தோல்வி அடைந்திருந்தது.) நடந்த விஷயங்களால் ஒருவித தயக்கம் இருந்தது. அதைத் தவிர துரதிர்ஷ்டமும் காரணம் என கருதுகிறேன். எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. நாங்கள் ஒன்றிரண்டு பந்துகளிலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நாங்கள் பேட்டிங் செய்த விதத்தை துரதிர்ஷ்டம் என்றே சொல்வேன். தொடரின் முக்கியமான இறுதிக்கட்டத்தில் அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பகுதி. அதைக்கண்டு பின்வாங்க முடியாது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியுடன் இணைந்துள்ளார். எனினும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு மே 1-ம் தேதிக்குப் பிறகே அவர், களமிறங்குவார். இடது-வலது கை தொடக்க ஆட்டக்காரர்கள் காம்பினேஷனை கருத்தில் கொண்டே சஹில் பராக்கை தேர்வு செய்து இருந்தோம். பயிற்சியின் போது அவர், சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். இது அவருடைய முதல் போட்டி. அதை வைத்து நான் அவரை எடைபோட முடியாது. அவர், பேட்டிங் செய்த விதத்தை வைத்துப் பார்க்கும்போது, அவரிடம் சிறந்த திறமை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கு நடைபெற்ற போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் போன்றே தெரிந்தது. ஆனால் காற்று மற்றும் பகல்-இரவு ஆட்டச் சூழலால், பந்து அதிகமாக ஸ்விங் ஆனது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தது அழுத்தத்தை ஏற்படுத்தியது. தொழில்முறை வீரர்களாக நாங்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். அணியை மாற்றுவது மட்டும் வெற்றிக்கான உத்தரவாதத்தைத் தந்துவிடாது. இது மனநிலை சார்ந்தது. மன உறுதியுடன் இருப்பதும், அணியாக ஒற்றுமையுடன் செயல்படுவதும் முக்கியம். இவ்வாறு அக்சர் படேல் கூறினார்.





















