
சென்னை: ஏப்ரல் 26-
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி வேகமாக குணமடைந்து வருகிறார் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: காயமடைந்துள்ள எம்.எஸ்.தோனி வருகைக்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவர் வேகமாக தேறி வருகிறார். அவர் விரைவில் அணிக்கு வரவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது.
ஆயுஷ் மாத்ரே காயமடைந்து தொடரிலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக உர்வில் படேலை விளையாட வைக்கலாமா என்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. இருந்தபோதும், அணியின் தொடக்க வரிசையில் ஏராளமான அதிரடி வீரர்கள் உள்ளனர். எனவே, உடனடியாக உர்வில் படேலை அணிக்குள் கொண்டு வரவேண்டிய அவசரம் இல்லை. சிறிது காலம் காத்திருப்போம்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்ம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர் ஒரு தரமான வீரர். இளம் வயதிலேயே கேப்டன் பதவியேற்று திறம்பட செயலாற்றி வருகிறார். அவருக்கு அதிக அளவில் ஆதரவு இருக்கிறது. அணிக்கு வெளியேயும், உள்ளேயும் அவருக்கு அதிக அளவில் மரியாதை உள்ளது. அது தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















