
புதுடெல்லி: ஆக 14- டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து அவற்றைக் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இருப்பினும், இதை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்தச் சூழலில் தான் தெருநாய் பிரச்சனை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
நாட்டில் கடந்த சில காலமாக நாய்க்கடி புகார்கள் அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. தெருநாய்கள் துரத்துவதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும் ரேபிஸ் பாதிப்பும் ஏற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தெருநாய் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதாகப் பல்வேறு தரப்பினரும் புகாரளித்து வருகிறார்கள்.
நீதிபதிகள் உத்தரவு இதற்கிடையே இது தொடர்பான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜேபி பார்திவாலா, நீதிபதி மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அடுத்த 8 வாரங்களில் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தெருநாய்களையும் பிடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், நாய்களுக்குத் தங்குமிடங்களை அமைக்கவும் உத்தரவிட்டனர். மேலும், நாய்களுக்காக குரல் கொடுப்போர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்குப் பொறுப்பேற்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். தெருநாய்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளை நாம் கட்டாயம் உருவாக்க வேண்டும் என்ற நீதிபதிகள், நாய் பிரியர்கள் உள்ளிட்ட எந்தத் தரப்பினர் மனுவும் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவித்தனர். இந்த உத்தரவு நாடு முழுக்க முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இன்று விசாரணை இதற்கிடையே நேற்றைய தினம் தலைமை நீதிபதி கவாயிடம் இது தொடர்பாக முறையிடப்பட்டது. தெருநாய்கள் விவகாரத்தில் முன்பு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவுக்கு நேர்மாறாக இந்த உத்தரவு இருப்பதாக முறையிடப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி கவாய் இந்த விவகாரத்தைக் கவனிப்பதாகக் கூறினார். தலைமை நீதிபதி கவாய் அறிவுறுத்தல் பெயரில் இந்த வழக்கை இப்போது மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கிறது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். இன்று இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் நிலையில், அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை உயர் நீதிபதி ஜே.பி. பர்திவாலா தனது உத்தரவில், “நாங்கள் இந்த நடவடிக்கையை எங்களுக்காக எடுக்கவில்லை.. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். எனவே, எந்தவித உணர்வுப்பூர்வமான கருத்துக்களுக்கும் இங்கே இடமில்லை. கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.. அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நாய்களைப் பிடித்து தற்காலிகமாக முகாம்களுக்கு மாற்ற வேண்டும்” என்றார்.