
போபால், மே 19- தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மகளின் உடலை வாங்க மறுத்து அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம், நொய்டா நகரைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (31). மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள கல்லூரியில் படித்தபோது, கடந்த 2012-ம் ஆண்டில் மிஸ் புனே பட்டத்தை வென்றார். பின்னர் மாடலிங் உலகில் கால் பதித்த அவர் கடந்த 2021-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான ‘‘முக்குரு மொனகல்லு’’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வேறு சில இந்தி, தெலுங்கு படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். திரைஉலகில் தொடர்ந்து முன்னேற முடியாத நிலையில் மும்பையில் உள்ள முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். மும்பை, டெல்லி உட்பட பல்வேறு நிறுவனங்களில் மார்க்கெட்டிங் மேலாளராகப் பணியாற்றினார். கடந்த 2024-ம் ஆண்டில் இணையம் வாயிலாக மத்திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்த சமர்த் சிங்குடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பரில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் ட்விஷா சர்மா, சமர்த் சிங் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவன பணியில் இருந்து விலகிய ட்விஷா கணவருடன் போபாலில் வசித்து வந்தார். ஆரம்பம் முதலே கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ட்விஷா கர்ப்பமானார். இதன்பிறகு அவரின் நடத்தையில் கணவர் சமர்த் சிங்குக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே மோதல் முற்றியது. இந்த சூழலில் கடந்த 11-ம் தேதி போபாலில் உள்ள வீட்டில் ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ட்விஷாவின் பெற்றோர், தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ட்விஷாவின் மாமியார் ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபாலா கைது செய்யப்பட்டார். கணவர் சமர்த் சிங் தலைமறைவாகிவிட்டார்.

















