
பெங்களூரு: மே 19 –
கர்நாடக மாநிலம் பெங்களூர் பீன்யா நெலகெதரஹள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
உயிரிழந்த ஓட்டுநர், புனீத் (37), நேற்று காலை சுமார் 10 மணியளவில் நெலகெதரஹள்ளி அருகே சாலையோரத்தில் தனது காரை நிறுத்தியிருந்தார். மதியம் 12 மணியளவில் கார் நிறுத்தப்பட்டிருந்ததைக் கவனித்த அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் காரை நோக்கிச் சென்றபோது, ஓட்டுநர் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அவரை எழுப்ப முயன்றனர்.
ஏசி இயக்கப்பட்ட நிலையிலும், கதவு மூடப்பட்ட நிலையிலும் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநரை எழுப்ப பலமுறை முயன்றும், புனீத் எழாததால் அப்பகுதி மக்கள் கல்லால் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்தனர். ஆய்வின்போது, ஓட்டுநர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பீன்யா போலீசார், அவரை உள்ளூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

















