Home செய்திகள் தேசிய செய்திகள் மக்களை சுரண்டும் மோடி – காங்கிரஸ் கடும் கண்டனம்

மக்களை சுரண்டும் மோடி – காங்கிரஸ் கடும் கண்டனம்

புது டெல்லி: மே 19 –
தேர்தல்கள் முடிந்ததால் விலைவாசி நாயகரான மோடி மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார் என பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஒரே வாரத்தில் இன்று இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, ‘விலைவாசி நாயகரான மோடியின் சாட்டை அடி மீண்டும் மக்கள் மீது விழுந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 90 பைசா உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களில் மட்டும் மோடி பெட்ரோல், டீசல் விலையை 4 ரூபாய் வரை உயர்த்தியுள்ளார்.
இந்த விலை உயர்வுடன் சேர்த்து, நாடு முழுவதும் பெட்ரோல் விலை 109 ரூபாயாகவும், டீசல் விலை 96 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. தேர்தல்கள் முடிந்துவிட்டதால், இந்த ‘விலைவாசி நாயகர்’ இன்னும் அதிகமாகச் சுரண்டுவார்’ என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று மீண்டும் உயர்த்தி உள்ளன. இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 அளவுக்கு உயர்த்தப்பட்டது.
இன்று விலை உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.104.49 என விற்பனை ஆகிறது. டீசல் விலை 86 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.11 என விற்பனை ஆகிறது.
தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 என உயர்ந்துள்ளது. அங்கு டீசல் விலை ரூ.90.67-ல் இருந்து ரூ.91.58 என விலை உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.109.70 என விற்பனை ஆகிறது. டீசல் விலை 94 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 96.07 என விற்பனை ஆகிறது.