தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி, டிச. 28- இந்திய தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை அறிவித்தது. அதன்படி, கடந்த ஆகஸ்டு 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். அதன் பிறகு, அக்டோபர் 29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 28-ம் தேதி வரை பெறப்பட்டது. இந்த காலகட்டத்தில் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.