
புதுடெல்லி, ஏப்ரல் 16- மேற்கு வங்கத்தில் வரும் 23, 29-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வந்த அதிகாரிகள் என்று தெரியவந்துள்ளது. புதுச்சேரி யூனியன், 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்காக தலைமைத் தேர்தல் ஆணையம் 549 பொது தேர்தல் பார்வையாளர்கள், 180 போலீஸ் பார்வையாளர்கள், 358 தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர்கள் என மொத்தம் 1,097 தேர்தல் பார்வையாளர்களை நியமித்துள்ளது. இந்த 1,097 பேரில் 54% பேர் மேற்கு வங்கத்துக்கு பார்வையாளர்களாக அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சாகேத் கோகலே கூறும்போது, “தேர்தல் காலங்களில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள், தேர்தல் நடைபெறவுள்ள கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மறுபுறம், அம்மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளை அனுப்புவதற்குப் பதிலாக, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளைத் பார்வையாளர்களாக அனுப்பியுள்ளது” என்றார் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ள 294 பொது பார்வையாளர்களில் 62 % பேர் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 111 பேர் பாஜக அல்லாத வேறு கட்சிகள் ஆளும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறும்போது, “அச்சமற்ற, வன்முறையற்ற, தூண்டுதல்களற்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் எண்ணம். அதேபோல் வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் அல்லது முறைகேடுகளோ இன்றி தேர்தல் நடைபெற வேண்டும். எங்களுடைய நோக்கம் நடுநிலையை உறுதி செய்வதுதான்” என்றார். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.


















