
புதுடெல்லி: ஏப்ரல் 16-
அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு வர்த்தக அதிகாரிகளுக்கு இடையிலான இந்த இருதரப்பு சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் முதலில் கடந்த மார்ச் மாதமே கையெழுத்தாக வேண்டியிருந்தது.
எனினும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அந்நாட்டின் இறக்குமதி வரி விதிப்பு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் சூழல் மாறியுள்ளது. அமெரிக்காவின் புதிய உலகளாவிய வரி விதிப்புக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த பிப்ரவரி மாதத்தில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட கட்டமைப்பை இறுதி செய்ததாக இரு நாடுகளும் அறிவித்தன. அந்த உடன்படிக்கையின்படி, இந்தியா மீதான இறக்குமதி வரிகளை 18 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரி விதிப்பு முறைகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, வரி விதிப்புக் கொள்கை மாறியுள்ளது.


















