
புதுடெல்லி: நவ. 4 –
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இது தொடர்பான முழுமையான விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் இரண்டாம் கட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
முதல் கட்டப் பணிகள் பீகாரில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும். சட்டமன்றத் தேர்தல் நடக்கும் முன் SIR இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். முதற்கட்டமாக, இந்த மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் 2002, 2003, 2004 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடப்படும். இந்த பணி உடனடியாகத் தொடங்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், “இரண்டாம் கட்டப் பணியில் 51 கோடி வாக்காளர்கள் இடம்பெறுவார்கள்” என்று குறிப்பிட்டார். மேலும், இந்த 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27 அன்று நிலுவையில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெறும் 1. அக்டோபர் 27, 2025 நிலவரப்படி ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட எண்ணிடப்பட்ட படிவங்களை தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs) மற்றும் உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் (AEROs) அச்சிடுவார்கள். 2. இந்த படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLOs) அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படும். படிவங்களில் தற்போதைய வாக்காளர் பட்டியலிலிருந்து தேவையான அனைத்து விவரங்களும் இருக்கும். அதன்பின்னர், BLO-க்கள் படிவங்களை தற்போதுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்குவார்கள். படிவங்களில் பெயருள்ள அனைவரும் தங்கள் பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பெயர் இருந்தால், கூடுதல் ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை. 4. பெயர்கள் பட்டியலில் இல்லாதவர்கள், ஆனால் அவர்களது பெற்றோரின் பெயர்கள் இருந்தால், அவர்களும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. அடையாளச் சான்று மட்டும் போதுமானது. 2002/03/04 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்ப்பதற்காகக் கிடைக்கும். 5. வாக்காளரின் பெயர் அல்லது பெற்றோரின் பெயர் பழைய பட்டியலில் இல்லையெனில், தேர்தல் பதிவு அலுவலர்கள் குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் தகுதியை உறுதிசெய்வார்கள். இதில் அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் அடங்கும். 6. மேலும், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள் போன்றவையும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆதார் அட்டையையும் 12 அடையாள ஆவணங்களின் பட்டியலில் தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது. ஆனால், ஆதார் அடையாளச் சான்றாக மட்டுமே பயன்படுத்தப்படும், பிறந்த தேதி அல்லது இருப்பிடச் சான்றாக அல்ல. 7. வாக்காளர் கிடைக்காமல் போனால் அல்லது சரிபார்ப்பு மற்றும் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டால், BLO-க்கள் மூன்று முறை வீடுகளுக்குச் சென்று விசாரிப்பார்கள். வாக்காளர்கள் படிவங்களை ஆன்லைனிலும் பூர்த்தி செய்யலாம். ஆனால் அதையும் BLO சோதனை செய்வார்கள்.
















