
தோகா, ஜன. 27- தோகாவில் டபிள்யூடிடி யூத் ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 4 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றது. யு-15 மகளிர் பிரிவில் இந்தியாவின் அஹோனா ராய் தங்கப் பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான அன்கோலிகா சக்ரவர்த்தி வெள்ளிப் பதக்கமும், நைஷா ரேவாஸ்கர் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர். யு-15 மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்கோலிகா, நைஷா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான யு-15 பிரிவு இரட்டையரில் இந்தியாவின் ஆகாஷ் ராஜவேலு, ரிஷான் சட்டோபாத்யாய் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 11–8, 11–4, 11–8 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் அலெக்சாண்டர் மாலோவ், ஹாங் காங்கின் ஹம் ஹாங் லோக் (ஹாங்காங்) ஜோடியை வீழ்த்தியது. ஆகாஷ் ராஜவேலு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். யு-19 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷி பவுமிக், பி.பி.அபிநந்த் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. யு-15 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்கோலிகா, ஆதித்யா தாஸ் ஜோடி தங்கம் வென்று அசத்தியது. யு-19 ஆடவர் ஒற்றையர் பிரிவில் அபிநந்த் வெள்ளிப் பதக்கமும், மகளிர் ஒற்றையர் பிரிவில் திவ்யான்ஷி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். யு-15 ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆதித்யா தாஸ் வெண்கலப் பதக்கம் பெற்றார்.


















