
சென்னை: நவம்பர் 11-
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் உள்ள பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று டிஜிபி அலுவலகத்துக்கு மீண்டும் ஓர் இ-மெயில் வந்தது.
அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் மற்றும் பழம்பெரும் நடிகை சச்சு வீடு, கவிஞர் கண்ணதாசன் வீடுமட்டும் அல்லாமல் பிரபல பத்திரிகையாளர் வீடு என சென்னையில் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இடங்களுக்கு போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சோதனை நடத்தினர். முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.
இதையடுத்து புரளியைக் கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்கின்றனர். நடிகை த்ரிஷா வீட்டுக்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

















