
டெல்லி, டிச. 25- நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வேறு எந்த மொழியை விட தமிழில்தான் அதிக அளவில் உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 160 உரைகள், சொந்த மொழியில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் தமிழில் மட்டும் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தை பொறுத்தவரை, சில எம்பிக்கள் தொடர்ந்து தமிழில்தான் பேசுவார்கள். சு.வெங்கடேசன், திருமாவளவன், பிரகாஷ், ஈஸ்வரசாமி, செல்வராஜ், தங்கத்தமிழ்ச்செல்வன், துரை வைகோ, சுப்பராயன், நவாஸ் கனி, வைத்திலிங்கம் இவர்கள் வழக்கமாக தமிழில்தான் பேசுவார்கள். அந்த வகையில் இந்த முறையும் தமிழில்தான் பேசினார்கள். அதேபோல கனிமொழி, தயாநிதி, பாலு உள்ளிட்ட சில எம்பிக்கள், வழக்கமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால், இவர்கள் இந்த முறை தமிழில்தான் பேசினார்கள். இவர்களை தவிர ரவிக்குமார், மலையரசன், அண்ணாதுரை, செல்வம், தரணிவேந்தன், முரசொலி ஆகிய எம்பிக்களும் தமிழில்தான் பேசினார்கள். அதேபோல ஆ.ராசா, அருண் நேரு, கார்த்தி, ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், கலாநிதி வீராசாமி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஆங்கிலத்தில் பேசினார்கள். நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் இந்தியாவை பொறுத்தவரை, இங்கு தேசிய மொழி என்கிற செட்டப் கிடையாது. இந்திய பரவலாக பேசப்பட்டாலும், பெரும்பான்மையாக மாநில மொழிகள்தான் பேசப்படுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் மாநில மொழியில் பேச கோரிக்கைகள் எழுந்தன. 1950 முதல் எம்பிக்கள் தங்கள் தாய் மொழியில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதை மொழிப்பெயர்ப்பதில் சிக்கல்கள் இருந்தன. பின்னர் நவீன தொழில்நுட்பம் வந்ததையடுத்து மொழிபெயர்ப்பு சிக்கல் நீக்கியது.

















