புதுடெல்லி: ஜூலை 29 –
ஏமனில் தூக்கு தண்டனை பெற்றுள்ள நர்ஸ் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளாக கிராண்ட் ஆஃப் முப்தியின் அலுவலகம் நேற்று தெரிவித்தது. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்படவில்லை.
இந்த விஷயத்தில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் பற்றி இங்கு பார்க்கலாம்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2008 ம் ஆண்டில் தனது 19 வயதில் நர்சிங் வேலை தேடி ஏமன் நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் கிளினிக் தொடங்கினார். ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து கிளினிக் நடத்தினார்.
தலால் அப்தோ மஹ்தி அவரது பாஸ்போர்ட்டை புடுங்கி வைத்து கொண்டதோடு, லாப பணத்தை மொத்தமாக அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்போர்ட்டை கைப்பற்றும் நோக்கி நிமிஷா பிரியா, அவருக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளார். இதில் ஓவர் டோஸ் ஆனதால் தலால் அப்தோ மஹ்தி இறந்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் கைதான நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற மத்திய அரசு முயன்றது. ஆனால் ஏமனில் ஹவுதி எனும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மத்திய அரசின் முயற்சிகள் தோல்வியடைந்தன. கடந்த 16ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் நம் நாட்டின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைள் மீண்டும் தீவிரமாகி உள்ளன. ஏமனில் கொலை வழக்கில் கைதாகும் நபர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க ரத்தப்பணம் வழங்கலாம். அதன்படி நிமிஷா பிரியா தரப்பில் ரூ.11 கோடி வரை வரை ரத்த பணம் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் கொலையான தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினர் அந்த பணத்தை ஏற்கவில்லை. இதனால்நிமிஷா பிரியா தொடர்ந்து சிக்கலில் தவிக்கிறார்.
இதற்கிடையே தான் நேற்று கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் அலுவலகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், ‛‛ஏமனில் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சனாவில் நடந்த உயர்மட்ட மீட்டிங்கை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நிமிஷா பிரியா குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை முற்றிலுமாக மறுத்துள்ளது. நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக தற்போது பரவும் தகவல் சரியானது இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் இந்தியா டூடே செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிமிஷா பிரியா இன்னும் சிக்கலில் உள்ளார்.














