நெல்லையப்பர் கோயில்ஆனித்திருவிழா தேரோட்டம்

நெல்லை: ஜூலை 8-
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (செவ்வாய்ழ்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள். இதனால் ரதவீதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா சிறப்புமிக்கது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் 8-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி நடராச பெருமான் பச்சை சாத்தி எழுந்திருந்து திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்குமேல் 4 மணிக்குள் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன், ரூபிமனோகரன், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.