Home செய்திகள் உலக செய்திகள் படகில் தீ: 5 பேர் பலி

படகில் தீ: 5 பேர் பலி

மணிலா: செப்.10-
பிலிப்பைன்ஸின் பலாவன் மாகாணத்தில் கோரோன் தீவிற்கு அருகில், MV June Aster என்ற பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேரை காணவில்லை என்று அந்நாட்டு கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து, படகு தலைநகர் மணிலாவிலிருந்து புறப்பட்டு கோரோன் பகுதியை நெருங்கியபோது நேற்று இரவு ஏற்பட்டது.
படகில் மொத்தம் 134 பேர் பயணித்தனர். இதில் 117 பயணிகளும் 17 படகு ஊழியர்களும் அடங்குவர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 87 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
பிலிப்பைன்ஸின் சுமார் 7,100 தீவுகள் இடையே மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்ல குறைந்த கட்டணப் படகுகள் முதன்மைப் போக்குவரத்தாக உள்ளன. இதனால், அங்கு படகு விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2023 இல் ஜம்போங்கா நகரிலிருந்து பாசிலன் தீவுக்குச் சென்ற படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
தற்போதைய விபத்தில் 87 பேரைக் காணவில்லை என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக 20 புயல்களை எதிர்கொள்ளும் பிலிப்பைன்ஸ், பருவமழை மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. படகுகளின் குறைந்த பராமரிப்பு மற்றும் போதிய பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாதது இத்தகைய விபத்துகளுக்குக் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.