
பாரிஸ்: செப்.10-
உலகின் அதிகம் பார்வையிடப்படும் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈஃபில் கோபுரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாள், சனிக்கிழமை வருகை தந்த இந்து மதப் பிரதிநிதிகள் குழுவின்போது பெண் ஊழியர்களின் இருப்பைக் கட்டுப்படுத்துமாறு நிர்வாகம் “ஏற்றுக்கொள்ள முடியாத” அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் கூறி, தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கோபுரம் மூடப்பட்டிருந்தது.
330 மீட்டர் (1,083 அடி) உயரமுள்ள இந்தச் சின்னமாக விளங்கும் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே கடந்த வார இறுதியில் கோபம் அதிகரித்ததாக சிஜிடி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த டயான் டாவோயின், ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த வருகைதரும் பிரதிநிதிகள் குழுவுடன் பெண் ஊழியர்கள் “தொடர்பில் இருக்கக் கூடாது” என்று நிர்வாகம் ஊழியர்களிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
பிஏபிஎஸ் (BAPS) என அழைக்கப்படும் இந்த அமைப்பு, ஸ்வாமிநாராயண் பிரிவைச் சேர்ந்த உலகளாவிய மத மற்றும் குடிமைப் பணியாற்றும் அமைப்பாகும். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரம்பரியக் கற்களால் கட்டப்பட்ட கோயில் திறப்பு விழாவைக் குறிக்கும் கொண்டாட்டங்களை அந்த அமைப்பு நடத்தி வருகிறது. சுமார் 100 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு முன்னதாக, ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக ஈஃபில் கோபுர நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தது. “இந்த ஒருங்கிணைப்பு எந்தக் கட்டத்திலும் பாலின அடிப்படையிலான கோரிக்கையாக இருக்கவில்லை. அதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கருத்தும், எங்கள் அமைப்பின் அல்லது பிரதிநிதிகள் குழுவின் கொள்கைகள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாலினம், பின்னணி அல்லது நம்பிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் சேவை என்ற கொள்கைகளில் பிஏபிஎஸ் தொடர்ந்து உறுதியாக உள்ளது. இவை எங்கள் பாரம்பரியப் போதனைகளுக்கும் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் சமூகப் பணிகளுக்கும் அடிப்படையான மதிப்புகள்” என்றும் அந்த அமைப்பு கூறியது. முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், “இந்தச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட அல்லது சிரமத்துக்கு உள்ளான அனைவரிடமும் உண்மையான மன்னிப்பை” அந்த அமைப்பு கோரியிருந்தது. ஈஃபில் கோபுரத்தை இயக்கும் நிறுவனம் இதுகுறித்து உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. 137 ஆண்டுகள் பழமையான இந்தக் கோபுரத்தை ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர். ஈஃபில் கோபுரத்தில் சிறப்பு பிரதிநிதிகள் குழுக்களின் வருகை அடிக்கடி நடைபெறுவதாக டாவோயின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற பிரபலங்களின் வருகைகளின்போதும் ஊழியர்கள் அதற்கேற்ப பணியாற்றுவதில் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பதாக அவர் கூறினார். ஆனால், சனிக்கிழமை வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் வழக்கத்திற்கு மாறானவை என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்போவதாக பாரிஸ் மேயர் இமானுவல் கிரெகுவார், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார். “பாலின சமத்துவம் எங்கள் வரலாற்றுச் சின்னங்களின் அடிவாரத்திலோ அல்லது இந்த நகரின் வேறு எந்த இடத்திலோ நிறுத்தப்படாது. அது எல்லா இடங்களிலும், அனைவருக்கும் பொருந்த வேண்டும். எந்தவித விதிவிலக்கும் இல்லாமல், அது எல்லா இடங்களிலும் நடைமுறையில் இருப்பதை நான் உறுதி செய்வேன்” என்று அவர் கூறினார். தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஈஃபில் கோபுரம் மூடப்படுவது இதுவே முதல் முறை அல்ல. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சின்னத்தின் பராமரிப்பை மேம்படுத்தவும், ஊதியத்தை உயர்த்தவும் கோரி ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, 2024 பிப்ரவரி மாதத்தில் அது ஆறு நாள்கள் மூடப்பட்டிருந்தது.














