
சிவகாசி: ஜூலை 1 –
சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவாகசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் கோகுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிந்தனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு ஆலையில் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என தேடும் பணியிலும், தீயை அணைக்கும் பயணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தின்போது தொழிலாளர் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.