Home மாவட்டங்கள் சென்னை பட்டினப்பாக்கத்தில் புகார் அளித்தவர் மீது அரிவாள் வெட்டு

பட்டினப்பாக்கத்தில் புகார் அளித்தவர் மீது அரிவாள் வெட்டு

சென்னை: நவம்பர் 16-
சென்னை பட்டினப்பாக்கம் அருகே, காவல் நிலையத்தில் புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே புகார் அளித்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆயுதங்களுடன் வந்த கும்பல் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனிவாசபுரம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். அப்பகுதியில் நேற்று மாலை சந்தோஷ் என்ற இளைஞர், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றதுடன், அதிக சத்தத்துடன் தொடர்ந்து ஹாரன் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குடியிருப்புப் பகுதியில் ஏன் இவ்வாறு ஹாரன் அடித்து தொந்தரவு செய்கிறாய் என நீலகண்டன் அவரைக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், நீலகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிரட்டலால் அச்சமடைந்த நீலகண்டன், நேற்று மாலையே பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று சந்தோஷ் மீது புகார் அளித்துள்ளார்.புகார் அளித்த தகவல் தெரிந்ததும், சந்தோஷ் தனது நண்பர்கள் சிலருடன் ஆயுதங்களோடு இரவு நேரத்தில் சீனிவாசபுரம் பகுதிக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். நீலகண்டனின் வீட்டை முற்றுகையிட்ட அந்தக் கும்பல், அவரைத் தெருவில் விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களையும் கும்பல் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலில் பலத்த காயமடைந்த நீலகண்டன் உள்ளிட்டோர், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த பட்டினப்பாக்கம் போலீசார், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வருகிறது.புகார் அளித்த உடனேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தாக்குதலைத் தடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.