
கம்பாலா, அக். 28-
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், 15 ஆண்டுகளில் 38 பேரைக் கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் உடல்களைச் சமைத்து சாப்பிட்டதாகக் கூறப்படும் சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளார். முஜுரிசி மோசே என்ற அந்த நபர், 2010 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உகாண்டாவின் மசாகா, இபந்தா, காசோ ஆகிய மாவட்டங்களில் பல கொலைகளைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை வெட்டிக் கொலை செய்வதும், ஆசை வார்த்தைகளைக் கூறி சிலரை வரவழைத்து கொலை செய்வதும் அவரது செயல்முறையாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைச் சமைத்து சாப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஜுரிசி மோசே ஏற்கெனவே பலமுறை கைது செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொரு முறையும் தப்பியோடியதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உகாண்டா ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
















