
பர்மிங்காம்: ஜூலை 2-
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபிக்கான தொடரில் ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 371 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்திருந்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் 5 சதங்கள் அடிக்கப்பட்ட போதிலும் வலுவில்லாத பந்துவீச்சால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. தொடரில் 0-1 என பின்தங்கியிருக்கும் நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்று பர்மிங்காமில் இங்கிலாந்துடன் மீண்டும் மோதுகிறது இந்திய அணி. பர்மிங்காமிலும் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் ஹெட்டிங்லி மைதானம் போன்றே பர்மிங்காமும் பேட்டிங்கிற்கே சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்துவதில் இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கக்கூடும். இது ஒருபுறம் இருக்க பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த போட்டியில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படக்கூடும் என தெரிகிறது. ஒருவேளை அவர், களமிறங்காத பட்சத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அறிமுக வீரராக இடம் பெறக்கூடும் அல்லது ஆகாஷ் தீப் சிங் களமிறங்கக்கூடும். முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
இதனால் அவர், தனது யுக்திகளை மாற்றி அமைக்கக்கூடும். இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த வகையில் குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் களமிறங்கக்கூடும். மேலும் ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு நித்திஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். அதேவேளையில் தனது அறிமுக ஆட்டத்தில் கவனம் ஈர்க்கத் தவறிய சாய் சுதர்சன், 8 வருடங்களுக்கு அணிக்கு திரும்பி உள்ள கருண் நாயர் ஆகியோர் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங் மோசமாக இருந்தது. மேலும் பீல்டிங்கில் சுமார் 7 கேட்ச்களை தவறவிட்டிருந்தனர். இந்த இரு விஷயங்களிலும் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் போட்டியில் பாஸ்பால் அணுகுமுறையை கையாண்டு வெற்றி கண்டது. பென் டக்கெட், ஸாக் கிராவ்லி, ஆலி போப், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டிங் வரிசை இந்திய அணியின் பந்து வீச்சு துறைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். பந்து வீச்சில் ஜோஷ் டங்க், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். முதல் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய கிறிஸ் வோக்ஸுக்கு பர்மிங்காம் சொந்த மைதானம் என்பதால் அவரிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். இங்கிலாந்து லெவன்: பென் ஸ்டோக்ஸ், ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூ ட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஷோயிப் பஷிர், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க். இந்திய அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், துருவ் ஜூரெல், நித்திஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், வாஷிங்டன்சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங். நேரம்: பிற்பகல் 3.30 நேரலை: சோனி ஸ்போர்ட்ஸ், ஜியோஹாட்ஸ்டார் பர்மிங்காமில் இந்திய அணி எப்படி?- பர்மிங்காம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. 7 ஆட்டங்களில் தோல்வி அடைந்த நிலையில் ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது. கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்து அணி 378 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்து இருந்தது.