
சிவகாசி: ஜூலை 17 –
மது போதையில் பள்ளிக்கு வந்ததைக் கண்டித்த ஆசிரியரை, 12-ம் வகுப்பு மாணவர்கள் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(47). திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் துறை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மதியம் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போது, 12-ம் வகுப்பு மாணவர்கள்சிலர் தாமதமாக வந்ததை பார்த்து, அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது மது வாசனை வந்ததால், மாணவர்களிடம் “மது அருந்தி யுள்ளீர்களா?” என்று கேட்டு, தலைமை ஆசிரியரிடம் வருமாறு அழைத்துள்ளார். அப்போது இரு மாணவர்கள் பையில் வைத்திருந்த மது பாட்டிலால் சண்முகசுந்த ரத்தை தாக்கினர்.
இதில் தலை, நெற்றி, தாடையில் வெட்டுக் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பள்ளியில் 2023 டிசம்பரில் நன்றாகப் படிக்க அறிவுறுத்திய ஆசிரியரை 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆசிரியரை தாக்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை திருத்தங்கல் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.