
இஸ்லாமாபாத் : ஆக. 4-
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஹபீப் தாஹிர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்கு பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகளை உள்ளூர் மக்கள் விரட்டியடித்தனர்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில், ஏப்., 22ல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, மே 7ல், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் அழித்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் பயங்கரவாதிகள் டிமிக்கி கொடுத்து வந்த நிலையில், அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், கடந்த மாதம் 28ம் தேதி, ஸ்ரீநகரில் சுட்டுக் கொன்றனர். அவர்கள் பயங்கரவாதிகள் சுலைமான் ஷா, ஹபீப் தாஹிர், ஜிப்ரான் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹபீப் தாஹிரின் இறுதிச் சடங்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குய்யான் என்ற கிராமத்தில், கடந்த மாதம் 30ம் தேதி நடந்துள்ளது.
இதில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரிஸ்வான் ஹனிப் மற்றும் அவரது கூட்டாளிகள் பங்கேற்க வந்தனர்.
அப்போது அவர்களுக்கும், ஹபீப் தாஹிர் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பொதுமக்கள் கூடியதை அடுத்து, ரிஸ்வான் ஹனிப், அவரது கூட்டாளிகள் அங்கிருந்து வெளியேறினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதன் மூலம், பஹல்காம் தாக்குதலுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
அதே நேரத்தில் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் விரக்தியில் உள்ளனர் என்பதே, பயங்கரவாதிகளை விரட்டியடித்ததில் இருந்து தெரியவருகிறது.