
இஸ்லாமாபாத்: ஜூலை 18 – பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துன்வா, ஜில்ஜிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் இஸ்லாமாபாத், ராணுவ தலைமையகமான ராவல்பிண்டி உட்பட பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.ஜீலம், சிந்து, சட்லஜ், ஜில்ஜிட், ஸ்வாட் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் பேரிடர் மீட்பு துறையின் செய்தித் தொடர்பாளர் பரூக் அகமது கூறும்போது, “கனமழை காரணமாக பாகிஸ்தான் முழுவதும் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த புதன்கிழமை மட்டும் 30 பேர் உயிரிழந்தனர். கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் நாசமாகி உள்ளன” என்று தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:பருவநிலை மாறுபாட்டால் பாகிஸ்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பெருமழையின்போது பாகிஸ்தானில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 40 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போதும் அதுபோன்ற சூழல் உருவாகி வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் 13,000 மலைச்சிகரங்கள் உள்ளன. பருவநிலை மாறுபாட்டால் அவற்றின் பனி உருகி பெருவெள்ளத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாட்டு மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இதன் காரணமாக இயற்கை பேரிடரின்போது பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாறுபாட்டை சமாளிக்க பாகிஸ்தான் அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.