பாகிஸ்தானுக்கு மரண அடி.. வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி

டிரினிடாட், ஆகஸ்ட் 13- பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, 34 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பி, வரலாற்றுத் தோல்வியைத் தழுவியது. தொடரை தீர்மானிக்கும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறிது தடுமாற்றம் இருந்தாலும், கேப்டன் ஷாய் ஹோப்பின் அபாரமான ஆட்டம் அணியை மீட்டது. தொடக்க வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்த நிலையில், ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய ஹோப், பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். அவருக்கு ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஒத்துழைப்பு கொடுக்க, இருவரும் இணைந்து கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். வெறும் 49 பந்துகளில் 110 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஷாய் ஹோப் 94 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் குவித்தார். ஜஸ்டின் க்ரீவ்ஸ் 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதன் விளைவாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. சீட்டுக்கட்டுப் போல சரிந்த பாகிஸ்தான் பேட்டிங்! 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையைக் கட்டினர். தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப், அப்துல்லா ஷஃபிக் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியால், அதன்பின் மீளவே முடியவில்லை. அணியின் முக்கிய வீரரான பாபர் அசாமும் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தானின் தோல்வி உறுதியானது. சல்மான் அகா 30 ரன்களும், முகமது நவாஸ் 23 ரன்களும் எடுத்து ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் வெறும் 92 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.