பாஜக.வில் இணைகிறாரா எம்.பி. சசி தரூர்?

புதுடெல்லி: ஜனவரி 24-
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். மத்தியில் உள்ள பாஜக அரசு, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை வெளிப்படையாக புகழ்ந்து வருகிறார்.இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நலனுக்கு எது நல்லதோ அதை செய்வேன் என்று சசி தரூர் உறுதியாக கூறினார்.கேரளாவில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கொச்சியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற மகா பஞ்சாயத்து ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் சசி தரூருக்கு ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தகுந்த மரியாதை தரவில்லை என்று தகவல் வெளியானது.இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி பங்கேற்ற மேலிடக் கூட்டம் டெல்லியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சசி தரூர் பங்கேற்கவில்லை. இதனால் அவர் பாஜக.வில் இணைவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.
முன்னதாக சசி தரூரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது, ‘‘டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் சசி தரூர் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்பார்’’ என்று தெரிவித்தன. ஆனால், நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கார்கே, ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட சசி தரூர் பங்கேற்கவில்லை. இதனால் சசி தரூர் பாஜக.வில் இணைவார் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது.