
டெல்லி, பிப். 13- மத்திய அரசு “வரைவு வருமான வரி விதிகள்” குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி பரிவர்த்தனைகளில் பான் (PAN) எண் கட்டாயமாக்கப்படும் வகையில் இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பான் எண் சமர்ப்பிப்பது அவசியமான சில பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் நிலையில், மத்திய அரசு புதிய வரைவு வருமான வரி விதிகளை வெளியிட்டுள்ளது. மோசடிகளைத் தடுக்க நிதி பரிவர்த்தனைகளில் பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என இருந்தது. அந்த விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பான் எண் சமர்ப்பிப்பதற்கான வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இவை நடைமுறைக்கு வரும். அதிகரிக்கும் வரம்புகள் அதன்படி அசையாச் சொத்து வாங்குதல் அல்லது விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் என்ற வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வங்கி, கூட்டுறவு வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் பணம் டெபாசிட் செய்யும் போது, ஒரு நிதி ஆண்டில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தது இப்போது ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் மேல் என்ற திருத்தப்பட்டுள்ளது.















