
பித்தோராகர்: ஜூலை 9-
உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பக்கத்து மாவட்டமான பித்தோராகரில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்காக, ராமகங்கா நதியைக் கடக்க இன்னும் கைகளால் இயக்கப்படும் ‘டிராலி’யை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இப்பகுதியின் பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மக்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகும் இதுவரை மீண்டும் பாலம் கட்டப்படவில்லை.
இதனால், மாணவர்கள் தங்களது கிராமங்களில் இருந்து ராமகங்கா நதிக் கரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வருகிறார்கள்; பின்னர், அவர்களின் பெற்றோர்கள் இந்த டிராலியைப் பயன்படுத்தி, பொங்கி வழியும் நதியின் வழியே அவர்களை அக்கரைக்கு கொண்டு விடுகிறார்கள் என்று சமூக ஆர்வலர் சுந்தர் சிங் பாத்யால் தெரிவித்துள்ளார்.இந்த டிராலியை இயக்குவதற்கு, பொதுப்பணித் துறை ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த டிராலி விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்;
6 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சூழல், தற்போதைய பருவ மழைக் காலத்தில் மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
குளிர் காலத்தில் நதியில் நீர்மட்டம் குறையும் போது கிராம மக்கள் தற்காலிக மரப்பாலத்தை அமைத்துக் கொண்டாலும்,
பருவ மழைக் காலத்தில் வேறு வழியின்றி பாகேஸ்வர் மாவட்ட பொதுப்பணித் துறையால் நிறுவப்பட்ட இந்த ஆபத்தான டிராலியையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.இது குறித்து பாகேஸ்வர் பொதுப்பணித்துறை பொறியாளர் கிருஷ்ணா
பிப்லியா கூறுகையில், ”இப்பகுதியில் 110 மீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்


















