
டெல்லி: ஜனவரி 21-
பாஜகவின் புதிய தேசியத் தலைவராகப் பதவியேற்ற நிதின் நபீன், முதல் நாளே தனது முதல் உரையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளைத் தாக்கிப் பேசியிருக்கிறார். சனாதன தர்மத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பாதுகாக்க அழைப்பு விடுத்த நிதின் நபீன், ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும்.. கார்த்திகை தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமிருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய தலைவராகக் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வந்தவர் ஜேபி நட்டா. 2019ல் தேசியத் தலைவராகப் பதவியேற்ற நட்டாவின் பதவிக்காலம் 2024 உடன் முடிந்திருக்க வேண்டும். இருப்பினும், சில காரணங்களால் அவருக்குத் தொடர்ச்சியாகப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது.
அன்றைய தினம் நிதின் நபீன் மட்டுமே பாஜக தலைவர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். இதன் மூலம் அவர் போட்டியின்றித் தலைவர் பதவிக்குத் தேர்வானார். கடந்த டிசம்பர் மாதம் நிதின் நபீன் பாஜக தேசியத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், இப்போது அவர் தேசியத் தலைவராகத் தேர்வாகி இருக்கிறார். மிகவும் இளம் வயதில் பாஜக தேசியத் தலைவராகப் பதவியேற்றவர் என்ற சிறப்பையும் 45 வயதான நிதின் நபீன் பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் நிதின் நபீன் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பதவியேற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நிதின் நபீன், பீகாரில் இருந்து பாஜகவை வழிநடத்தும் முதல் நபராகவும் திகழ்கிறார்.
இந்த நிகழ்வில் பேசிய நிதின் நவீன், பிரதமர் நரேந்திர மோடி தான் எப்போதும் தனக்கு உத்வேகம் தருவதாகக் குறிப்பிட்டார். மேலும், விலகி நிற்பது தீர்வாகாது எனக் கூறி இளைஞர்களைத் தீவிர அரசியலில் ஈடுபடுமாறும் அவர் அறிவுறுத்தினார். அரசியலை எப்போதும் மாரத்தானாகக் கருதி வேண்டும் என்றும், வேகத்தை விட சகிப்புத்தன்மைக்கு முக்கியத்துவம் தரவும் அவர் அறிவுறுத்தினார். இடமில்லை மேலும், நிதின் நபீன் தனது உரையிலேயே தமிழ்நாடு அரசியல் தொடர்பாகவும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ராமர் பாலத்தை மறுப்பவர்களும், கார்த்திகை தீபம் போன்ற நம்பிக்கைகளை எதிர்ப்பவர்களும் இந்திய அரசியலில் இனி இடம் இருக்கக்கூடாது என்றும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அவர் மேலும், “வரும் மாதங்களில் தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தொண்டர்கள் தங்கள் போராட்ட, கடின உழைப்பால் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வார்கள். வழிபாட்டுத் தலங்கள், சனாதன மரபுகளைப் பாதுகாக்கவும், நாட்டைப் பாதுகாப்பாக வைக்கவும் பாஜக தொண்டர்கள் போராட வேண்டும். இதன்மூலம் பாஜக ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க முடியும்” என்றார். வெற்றி முக்கியம் மேலும், கார்த்திகை தீப விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கொண்டு வந்த தீர்மானத்தையும் நபீன் விமர்சித்தார். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், நிதின் நபீனுக்கு அதுவே முதல் சோதனையாக இருக்கும். நிதின் நபீனின் செயல்பாடுகளை இதை வைத்தே கவனிக்கப்படும்.














