
பெங்களூரு: ஆக. 2-
கற்பழிப்பு பலாத்காரம் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். பிர பிரஜ்ஜுவல் தரப்பு வழக்கறிஞர் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைத்தனர். தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பிரஜ்வல் அவர்களை பார்த்த நீதிபதி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர் நான் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு ஒரு மிகப்பெரிய குடும்பப் பின்னணி கொண்டு இருக்கும்போது இப்படிப்பட்ட புகார்கள் வராதது ஏன் அப்போது யாரும் என் மீது கற்பழிப்பு புகார் கூறவில்லையே. என்று ஆங்கிலத்தில் தனது விளக்கத்தை உருக்கமுடன்
கூறினார். இந்த நிகழ்வுகள் இன்று மதியம் வரை நீடித்தது எனவே பிற்பகல் அல்லது மாலையில் தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
பணிப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் இன்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்ற தண்டனை விவரங்களை (Prajwal Revanna sentence details) சிறப்பு கோர்ட் அறிவிக்கிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சியின் முன்னாள் எம்பியுமானவர் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
இந்த வீடியோவில் இருந்த பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹாசன் ஒலேநரசிப்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடந்தது. இதன்பேரில், பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக ஜெர்மனியில் தலைமறைவாக இருந்து பின்னர் பெங்களூர் திரும்பிய அவர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் கடந்த 14 மாதங்களாக பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் இருந்து வருகிறார். பிரஜ்வல் மீதான 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் ஒன்றான மைசூர் கே.ஆர்.நகரை சேர்ந்த 48 வயது பணிப்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் எஸ்.ஐடி போலீசார் விசாரணையை முடித்து பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் 2 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்த நிலையில், நீதிபதி சந்தோஷ் கஜானன பட், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். பணிப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்றும், இது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது என்று உத்தரவிட்டார். மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(k) மற்றும் 376(2)(n) ஆகியவற்றிற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது ஆயுள் தண்டனை வரையும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மற்ற பிரிவுகளான 354(A), 354(B), 354(C) ஆகியவை 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கும். பிரிவு 506-க்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், பிரிவு 201-க்கு ஒரு ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் தண்டனை விதிக்கப்படலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008-ன் பிரிவு 66(E) 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.