
லண்டன்: ஜூலை 29-
பிரிட்டிஷ் ராணுவத்தில், கூர்க்கா படைப்பிரிவைப் போன்று, சீக்கியருக்கு என தனி படைப்பிரிவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதை பரிசீலிப்பதாக பிரிட்டன் ராணுவ அமைச்சர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணுவத்தில், 1840களில் இருந்து சீக்கியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரண்டு உலகப் போர்களிலும் சீக்கியர்கள் அதிகளவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி., குல்தீப் சிங் சஹோட்டா, சமீபத்தில் பார்லிமென்டில் பேசினார். அப்போது, சீக்கியர்களுக்கு என, ராணுவத்தில் தனி படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று அவர் கோரினார். ’கடந்த, 2015ம் ஆண்டில் இருந்தே சீக்கிய படைப்பிரிவை நிறுவுவதற்கான கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை’ என, அவர் பேசினார்.இரண்டு உலகப் போர்களிலும் சீக்கிய வீரர்களின் விசுவாசத்தையும், தைரியத்தையும் மேற்கோள் காட்டி அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த பிரிட்டன் ராணுவ அமைச்சர் வெர்னான் ரோட்னி கோக்கர், “இது குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையிலான அரசு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புள்ளிவிபரங்களின்படி, பிரிட்டன் ராணுவத்தில், 160க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் உள்ளனர். இதைத் தவிர, பல படைப்பிரிவுகளிலும் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.