
புதுடெல்லி, பிப். 14- வரலாற்றில் முதன்முறையாக இந்திய விமானப் படை அதிகாரிகள் பிரிட்டனில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் (ஆர்ஏஎஃப்) வேலி தளத்தில் அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதுகுறித்து பிரிட்டன் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய விமானப்படையைச் சேர்ந்த 3 தகுதிவாய்ந்த விமானப் பயிற்றுநர்கள் பிரிட்டனின் ஆர்ஏஎப் வேலி தளத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். இது பிரிட்டனின் அதிவேக ஜெட் விமானிகளுக்கான முதன்மைப் பயிற்சி தளமாகும். தொடக்கத்தில் இரண்டு ஆண்டு காலத்திற்கு இந்திய அதிகாரிகள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள். அவர்கள் “பிஏஇ ஹாக் டி2’ அல்லது ‘டெக்சன் டி1’ ரக விமானங்களில் பயிற்சி அளிப்பார்கள். இந்தப் பணியின் போது, இந்திய அதிகாரிகள் பிரிட்டன் தளபதிகளின் கீழ் பணியாற்றினாலும், அவர்கள் இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















