Home மாவட்டங்கள் பெங்களூர் பிரேமலதா, சவுமியாவின் துல்லிய பேச்சுகள்

பிரேமலதா, சவுமியாவின் துல்லிய பேச்சுகள்

சென்னை: ஜூன் 26-
தவெக தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. திராவிடக் கட்சியல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ள சூழலில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு தேமுதிக (விருதாச்சலம்) எம்எல்ஏ பிரேமலதாவும், பாமக (தருமபுரி) எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் தங்களது சட்டப்பேரவை பிரவேசத்தின் முதல் நாளில் இருந்தே முன்வைக்கும் துல்லிய பேச்சுகளால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கின்றனர்.234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு 2026 தேர்தலில் 23 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் 12 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். எனவே, ஒப்பீட்டு அளவில் இது கணிசமான ஏற்றம்தான்.தமிழக சட்டப்பேரவை வரலாற்றை திருப்பிப் பார்த்தால், 1991-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 32 பெண் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதே இதுவரை அதிக எண்ணிக்கையாக இருக்கிறது. அப்போது அவையின் பெண் உறுப்பினர்கள் பலம் 13%.அதன்பின்னர், 2001-ல் 24 பெண் எம்எல்ஏக்கள் இருந்தனர். பேரவையில் பெண் உறுப்பினர்களின் பலம்10% ஆக இருந்தது. தற்போது 23 பெண் உறுப்பினர்கள் என்பதால் மீண்டும் மொத்த உறுப்பினர்களில் மகளிர் பலம் 10% ஆக இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் பெண் பிரதிநிதிகளின் 3-வது அதிகபட்ச எண்ணிக்கையாக இது அமைகிறது.
33% இட ஒதுக்கீடு பற்றி இன்னும் விவாதங்கள் நடத்தப்பட, கட்டுரைகளும் எழுதப்பட, இதைவிட வேறு என்ன காரணம் இருந்தவிட முடியும் என்பதையே இந்த பிரதிநிதித்துவம் உணர்த்துகிறது.
எண்ணிக்கை அளவில் இலக்கை எட்டாவிட்டாலும் கூட தற்போதைய தமிழகத்தில் 4 பெண் அமைச்சர்கள் இருப்பது பெருமிதம் கொள்ள வேண்டியதே. அதேபோல், 23 எம்எல்ஏக்களில் இரண்டு பெண் எம்எல்ஏக்களின் சட்டப்பேரவை நடவடிக்கைகளின் பங்களிப்பு இன்னும் அதிகமான பெண்களை அரசியல் நோக்கி நகர்த்துவதாகவே இருப்பதாக வரவேற்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்தும், சவுமியா அன்புமணியும் ஆணாதிக்கம் தோய்ந்த அரசியல் களத்தின் புதிய நம்பிக்கையாக திகழ்கிறார்களா என்று சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
இந்தியாவில் இதுவரை 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கு பெண் முதல்வர்கள் இருந்திருக்கின்றனர். என்றாலும்கூட சட்டப்பேரவை என்றாலே ஆண் எம்எல்ஏக்களின் குரல்தான் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடியும்.
தமிழகத்தில் தன் கணீர் குரலால், ஆளுமைத் திறனால், கூர்மையான பதில்களால், எதிர்க்கட்சிகளை அதிரவைக்கும் கர்ஜனைகளால் ஜெயலலிதா ஒட்டுமொத்த சட்டப்பேரவையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் சமீப காலங்களில் தமிழக சட்டப்பேரவையில் அப்படியான பெண் குரலை கேட்க முடியவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்வது போல் பிரேமலதா, சவுமியாவின் இருப்பு அமைந்துள்ளது . என்பது மறுப்பதற்கில்லை. தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசிய பிரேமலதா, முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியது போல் பவர் காட்டினார்.