
புதுடெல்லி, ஏப்ரல் 16- பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த பலரும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளைப் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் பிஹார் முதல்வராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரியும் இணைந்துள்ளார். சாம்ராட் சவுத்ரி முதலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் அரசியலைத் தொடங்கினார். அப்போது முதல்வராக இருந்த ராப்ரி தேவியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் 2014-ல் இணைந்து அமைச்சரானார். கடந்த 2017-ல் பாஜகவில் இணைந்தார். முதலில் சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சவுத்ரி, பின்னர், மாநில பாஜக தலைவரானார். நிதிஷ்குமார் அரசில் துணை முதல்வராக இருந்த சாம்ராட், இப்போது முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாத சாம்ராட் பாஜக.வில் சேர்ந்து முதல்வராகி இருக்கிறார். இதுபோல், பாஜகவின் நேரடி அரசியல் பின்னணி எதுவுமின்றி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களில் இதுவரை 9 பேரை முதல்வர்களாக நியமித்துள்ளது பாஜக. இந்தப் பட்டியலில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் உள்ளார். இவர் காங்கிரஸில் இருந்து 2015-ல் பாஜகவில் இணைந்தவர். அசாமில் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராகவும் ஹிமந்த பிஸ்வா பணியாற்றியுள்ளார். கடந்த 2016-ல் மீண்டும் வந்த பாஜக ஆட்சியின் அமைச்சராக இருந்தவர், 2021 தேர்தல் வெற்றிக்கு பின் முதல்வராகி விட்டார். கடந்த 2016-ல் பாஜக அசாமில் தனது முதல் ஆட்சியை அமைத்தபோது, சர்வானந்த சோனோவால் முதல்வரானார். இவரும் பாஜக, ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லாமல், ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ கட்சியில் இருந்து வந்தவர். பின்னர் ‘அசாம் கண பரிஷத்’ கட்சியில் இணைந்த சோனேவால், 2011-ல் பாஜகவில் இணைந்தார்.


















