பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்கள் நீக்க நடவடிக்கை:

புதுடில்லி, ஜூலை 15- பீஹாரில் 35 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்குகிறது. பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு நடவடிக்கையை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. வீடு, வீடாக சென்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முழு விசாரணைக்கு பின்னர், அவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின் விளைவாக, 35 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.