புடின் பத்திரிகையாளர் சந்திப்பில் ்காதலை சொல்லி வெற்றி கண்ட பத்திரிகையாளர்!

ரஷ்யா: டிசம்பர் 20-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நேரலை ஆண்டு இறுதிப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ​​ஒரு ரஷ்யப் பத்திரிகையாளர் தனது காதலிக்குத் திருமணம் செய்ய முன்மொழிந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த எதிர்பாராத சம்பவம் அதிக கைதட்டலை பெற்றது.
போர் அச்சுறுத்தல்களுக்கும் ரஷ்யாவின் பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கும் மத்தியில், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் பிரபலம். ரஷ்யாவிலும், ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், ரஷ்யாவை உன்னிப்பாக கவனிக்கும் மேற்கத்திய நாடுகளிலும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.பல மணி நேரம் தொடர்ந்து நடக்கும் இந்த சந்திப்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கேள்விகளை ரஷ்ய அதிபரிடம் எழுப்புவர். அதற்கு அவரும் சளைக்காமல் பதில் சொல்வார். அப்படி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அரங்கேறிய காதல் திருமண முன்மொழிவு, சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.அதிபர் புடினின் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் இருந்தபோது, சிவப்பு வண்ண டை அணிந்து இருந்த, 23 வயதான பத்திரிகையாளர் கிரில் பஜானோவ் ‘நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்று எழுதப்பட்ட சுவரொட்டியை ஏந்தியபடி, ரஷ்ய அதிபர் புடினின் கவனத்தை ஈர்த்தார்.கல்யாணம் பண்ணிக்கோ!‘’என் காதலி இப்போது இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும், ஓலேச்கா, என்னை மணந்துகொள்’’ என பஜானோவ் செய்தியாளர்கள் நிறைந்திருந்த அரங்கில் கூறினார்.நேரலை ஒளிபரப்பு தொடர்ந்துகொண்டிருந்தபோது, ​​இந்த எதிர்பாராத நிகழ்வு பார்வையாளர்களிடையே சிரிப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்தியது. பின்னர் பஜானோவ் தனக்கு ஒதுக்கப்பட்ட கேள்விக்கு நோக்கி திரும்பி விட்டார். அதிகரித்து வரும் அன்றாட செலவு உள்ளிட்ட குறித்து கேள்வி எழுப்பினார். ஒரு மணி நேரம் கழித்து, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஒரு புதிய தகவலுடன் அந்த அமர்வில் குறுக்கிட்டனர்.
கல்யாணத்திற்கு சம்மதம்!
‘எங்களுக்கு ஒரு முக்கியச் செய்தி கிடைத்துள்ளது. இங்குள்ள நம்மில் ஒருவருக்கு இது மிகவும் முக்கியமானது,’ என்று நெறியாளர் கூறினார். கிரில் பஜானோவின் காதலி அவரது முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டதாக அவர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்பு மீண்டும் கைதட்டலை பெற்றது. ரஷ்ய அதிபர் புடினும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புடினுக்கு அழைப்பு
இந்த வரவேற்பால் உற்சாகமடைந்த பத்திரிகையாளர் பஜானோவ், ‘அதிபர் புடின் அவர்களே, எங்கள் திருமண விழாவில் உங்களைக் கண்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்,’ என்றார்.அதைக் கேட்ட ரஷ்ய அதிபர் புடின், திருமணம் செய்துகொண்டு ஜோடியாக மாஸ்கோ க்ரெம்ளின் மாளிகைக்கு வரும்படி தம்பதிக்கு அழைப்பு விடுத்தார். அவரது இந்த அறிவிப்பு, பத்திரிகையாளர் சந்திப்பில் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.