பும்ராவை சரமாரியாக விளாசிவிட்டு சமாளித்த இர்பான் பதான்

மும்பை, ஆகஸ்ட் 30- இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது பணிச்சுமையைக் காரணம் காட்டி, சில குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக இர்பான் பதான் முன்பு சர்ச்சையாக பேசி இருந்த நிலையில் தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பும்ராவின் மனப்பான்மையை நான் ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை என்று கூறியுள்ள அவர், தனது விமர்சனத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சில முக்கியப் போட்டிகளில் பும்ரா பங்கேற்காதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓவல் டெஸ்டில் அவர் விளையாடாதது குறித்துப் இர்பான் பதான் உட்பட பலரும் விமர்சித்திருந்தனர். இந்தச் சூழலில், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக இர்பான் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பலர் நான் பும்ராவின் மனப்பான்மையை கேள்வி கேட்பதாக நினைக்கிறார்கள். நிச்சயமாக இல்லை. கடுமையான முதுகுப் பகுதி காயத்திற்குப் பிறகும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுக்கும் ஒருவரை நான் ஏன் விமர்சிக்கப் போகிறேன்? யாரும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அப்படியென்றால், பதானின் விமர்சனம் என்ன? தனது விமர்சனத்தின் உண்மையான நோக்கம் வேறு என்று இர்பான் பதான் விளக்கினார். “ஒரு வீரர் ஆடும் லெவனில் இடம்பெற்று, களத்திற்கு வந்துவிட்டால், அவர் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்த வேண்டும். பணிச்சுமை மேலாண்மை என்ற பெயரில், ஒரு ஸ்பெல்லில் 5-6 ஓவர்கள் மட்டுமே வீசுவது போன்ற கட்டுப்பாடுகளுடன் விளையாடினால், நீண்ட காலத்திற்கு அணிக்கு வெற்றியைத் தேடித் தராது என்பதுதான் என் கருத்து” என்றார்.