புலி பல்லுடன் தங்க சங்கிலியா? வசமாக மாட்டும் மத்திய அமைச்சர்

திருச்சூர், ஜூலை 9- பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, தான் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியில் புலி பல் கோர்த்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு எதிராக புகார்கள் பறந்த நிலையில், சுரேஷ் கோபியின் தங்க சங்கிலியை வாங்கி ஆய்வு செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளது. புலி பல் கோர்த்த தங்க சங்கிலி அணிந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவு செய்துள்ளது. தங்க சங்கிலியுடன் புலிப்பல் கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ் கோபி. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சுரேஷ் கோபி கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் இதுவரை கால் பதிக்காத பாஜகவுக்கு முதல் எம்பியாக சுரேஷ் கோபி, கேரளாவில் வென்று பாஜக தனது வெற்றி கணக்கை தொடங்க காரணமாக இருந்தார். இதனால், மத்திய அமைச்சர் பதவியும் சுரேஷ் கோபிக்கு கிடைத்தது. மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பொறுப்பானது சுரேஷ் கோபிக்கு வழங்கப்படது. இந்த நிலையில்தான், சுரேஷ் கோபி சமீபத்தில் வெளியிட்ட ஒரு போட்டோவில் தனது கழுத்தில் தங்க சங்கிலியுடன் புலிப்பல் கோர்த்து இருப்பது ஒரு செயினை அணிந்து இருந்தார். இந்த புகைப்படத்தை இணையத்தில் கவனித்த பலரும், சுரேஷ் கோபி கழுத்தில் அணிந்து இருப்பது புலிப்பல் தான் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். திருச்சூர் வடானப்பள்ளி பகுதியை சேர்ந்த ஐஎன்டியூசி இளைஞர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் முகமது பாசிம் கேரள மாநில டிஜிபிக்கு புகார் ஒன்றை அனுப்பி விட்டுள்ளார்.