
பெங்களூரு: ஜூன் 16-
பெங்களூரு சககார நகரில் நேற்று மாலை, 4 வயது சிறுமி ஒருத்தியை தெருநாய்கள் கூட்டம் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சககார நகர், சி.க்யூ.ஏ.எல் லேஅவுட் பகுதியில் வசித்து வரும் சங்கீதா (4) என்ற சிறுமிதான் இந்த கோர தாக்குதலுக்கு ஆளானாள். இவளது பெற்றோர் யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சககார நகரில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று மாலை, அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டுமான கட்டிடம் அருகே சிறுமி சங்கீதா நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது, பின்னால் இருந்து திடீரென பாய்ந்து வந்த 4, 5 தெருநாய்கள் கொண்ட கூட்டம், சிறுமியை கீழே தள்ளி கடித்து குதறின.
நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த சிறுமி மரண பயத்தில் அலறினாள். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்து, நாய்களை விரட்டியடித்து சிறுமியை மீட்டனர்.
நாய்கள் கடித்ததில் சிறுமியின் கை, கால் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூர சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரு நகரில் தெருநாய்கள் தொல்லை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
சம்பவம் பற்றி அறிந்ததும் பிபிஎம்பி வடமண்டல அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


















