Home செய்திகள் தேசிய செய்திகள் ஊழியர்களுக்கு சம்பளம் என போலீசார் ரூ.6.5 கோடி ஆட்டை

ஊழியர்களுக்கு சம்பளம் என போலீசார் ரூ.6.5 கோடி ஆட்டை

மும்பை, ஆக. 5–- மும்பை போலீஸ் துறையில், இல்லாத ஊழியர்களுக்கு சம்பளமாக 6.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கணக்கு எழுதி, முறைகேடுகள் செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகி இருக்கிறது. மஹாராஷ்டிராவில் தற்போது பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை போலீஸ் துறையில், கடந்த 2019 – 2020 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட, ‘சேவார்த்’ சம்பள மென்பொருளில் பதிவான தகவல்களை, புதிய தளத்துக்கு மாற்றும் பணிகள் சமீபத்தில் நடந்தன. அப்போது, போலீஸ் துறையில் இல்லாத ஊழியர்களின் பெயர்களுக்கு சம்பளமாக 6.5 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இந்த முறைகேடு குறித்து, வடக்கு மண்டல போலீஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. அதில், போலீஸ் துறையுடன் எந்த தொடர்பும் இல்லாத 10 பேரின் பெயர்கள், ஊழியர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 2019, டிச., முதல், 2020, பிப்., வரையும், பின்னர் 2020, ஜூன் முதல், 2020, செப்., வரையிலும் மாதந்தோறும் சம்பளம் பட்டுவாடா ஆனது கண்டுபிடிக்கப்பட்டது.