Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் ரகளை செய்த ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

பெங்களூரில் ரகளை செய்த ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

பெங்களூர், ஆகஸ்ட் 28-
பெங்களூரு அருகே நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பண்டேபாள்யா காவல் எல்லைக்குட்பட்ட சோமசுந்தரபாள்யா பகுதியில், நேற்று நள்ளிரவு 12.50 மணி அளவில் ஜிஷான் என்பவன் மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு சென்றுள்ளான். மேலும், அங்குள்ள பொதுமக்களை மிரட்டி கடும் பீதியை ஏற்படுத்தி வந்துள்ளான்.
இதுகுறித்து தகவலறிந்த பண்டேபாள்யா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் மற்றும் காவலர் சந்தீப் காம்பிளே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற ஜிஷானை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது, தான் வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் காவலர் சந்தீப் காம்பிளேவை ஜிஷான் கொடூரமாக தாக்கியுள்ளான். தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் சச்சினையும் தாக்க முயன்றுள்ளான்.இதையடுத்து, தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் முதலில் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு எச்சரித்தார். எனினும், ஜிஷான் அடங்காமல் தாக்குதலை தொடர்ந்ததால், சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் தனது துப்பாக்கியால் ஜிஷானின் காலில் சுட்டார்.தோட்டா பாய்ந்ததில் ஜிஷான் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். இதையடுத்து, அவனை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி ஜிஷான் மற்றும் அவனது தாக்குதலில் காயமடைந்த காவலர் சந்தீப் காம்பிளே ஆகிய இருவரும் உடனடியாக சிகிச்சைக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஜிஷானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவன் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்த இடத்திற்கு மூத்த போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதுகுறித்து பண்டேபாள்யா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.