
பெங்களூரு, ஜூலை.4-
பெங்களூருவில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் சிசிபி (மத்திய குற்றப்பிரிவு) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டலப் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிசிபி போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீஹரிபாபு தலைமையில், போலீசார் இன்று அதிகாலை ரவுடிகளின் வீடுகளுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்
இந்த அதிரடி வேட்டையின் போது, இந்திரா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி பிரபாகர் என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர மாரகாஸ்திர ஆயுதங்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
சோதனைக்குள்ளான 30-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் தற்போதைய தொழில், வசிக்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் மொபைல் எண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்த போலீசார், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மீண்டும் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், குண்டாஸ் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிசிபி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடி வேட்டை பெங்களூரு ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது


















