
பெங்களூரு, ஜூலை 4-
கர்நாடகாவில் ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக, மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை குறிவைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு தீவிர காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் மேலிடத்தில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றனர்.
இந்த மாதம் 15-ஆம் தேதி ஆடி மாதம் தொடங்குகிறது. எனவே, அதற்கு முன்பாகவே அதாவது இந்த மாதம் 11 அல்லது 12-ஆம் தேதிகளில் அமைச்சரவை விரிவாக்கம் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமைச்சர் பதவியைப் பெற துடிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களாகவே டெல்லியில் முகாமிட்டு, தங்களுக்கு செல்வாக்குள்ள தலைவர்களைச் சந்தித்து சீட் பிடிக்க அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகின்றனர்.
டெல்லியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசி, தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியில் 3 முதல் 4 முறை வெற்றி பெற்ற சீனியர் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவிக்காக பலத்த சிபாரிசுகளைச் செய்து வருகின்றனர். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், எப்படியாவது மந்திரி ஆகிவிட வேண்டும் என காங்கிரஸில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் யாரை அமைச்சராக்குவது என்று மேலிடத் தலைவர்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
மண்டல வாரியாகவும், சாதி வாரியாகவும் அனைத்து சமன்பாடுகளையும் கணக்கில் கொண்டே காங்கிரஸ் மேலிடம் இறுதிப் பட்டியலைத் தயாரித்து வருகிறது.
மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் ஏற்கனவே 2-3 சுற்றுப் பேச்சுகளை நடத்தி முடித்துள்ளனர். தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா திரும்பியதும் அவருடன் இறுதி கட்ட ஆலோசனை நடத்தி அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி டி.கே. சிவக்குமார் தலைமையில் புதிய அரசு அமைந்தது. முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் சேர்ந்து 13 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இன்னும் அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. இந்த 20 இடங்களுக்கு காங்கிரஸில் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் முட்டி மோதுவதால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது.
4, 5 முறை வென்ற சீனியர் எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர். அதேநேரம், புதிய முகங்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதால், பட்டியலைத் தயாரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
காலியாக உள்ள 20 இடங்களில், 5 அல்லது 6 இடங்களை இரண்டு முறை மட்டுமே வென்ற எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை சீனியாரிட்டி, சாதி, மண்டல வாரியாகப் பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
இந்த மாதம் 15-ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அதற்கு முன்னதாக 13-ஆம் தேதி அமாவாசை வருகிறது. எனவே, அமாவாசைக்கு முன்பாகவே, ஜூலை 11 அல்லது 12-ஆம் தேதிகளில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசித்து, இறுதிப் பட்டியலை தயார் செய்வதற்காக இந்த மாதம் 8-ஆம் தேதி முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேச டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் நாளைக்கே டெல்லி செல்ல வேண்டியிருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் ஜூலை 8-ஆம் தேதிதான் டெல்லி திரும்புகிறார். இதனால், நாளை செல்வதற்குப் பதிலாக ஜூலை 8 அன்று டெல்லி செல்லும் இருவரும், அங்கேயே 2 நாட்கள் தங்கியிருந்து ராகுல் காந்தியுடன் விரிவாகப் பேசி அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்யவுள்ளனர்.
ஏ.ஐ.சி.சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரன்தீப் சிங் ஆகியோர் ஏற்கனவே இது குறித்துப் பேசி முடித்துள்ளனர். இறுதி கட்டமாக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கே.பி.சி.சி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் ஆகியோருடன் ஆலோசித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு, ராகுல் காந்தியின் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.
ஜூலை 8-ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும், துணை முதலமைச்சர் சித்தராமையாவும் தங்களது ஆதரவாளர்களில் யாரை அமைச்சராக்க வேண்டும் என்று தனித்தனிப் பட்டியலை கையில் வைத்துள்ளனர். இந்த பட்டியலை மேலிடத்திடம் சமர்ப்பித்து, தங்கள் ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவியைப் பெற்றுத் தர இருவரும் முழு வீச்சில் முயற்சிக்கப் போகிறார்கள்.
காங்கிரஸ் வட்டாரத்தில் நடக்கும் இந்த அதிரடி நகர்வுகளைப் பார்த்தால், ஆடி மாதம் பிறப்பதற்குள் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது நூற்றுக்கு நூறு உறுதி என்பது தெளிவாகிறது.


















