
பெங்களூரு: ஜூலை 5 –
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும் உலக தடகள சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கு உலக தடகள சங்கம் ‘ஏ’ பிரிவு அந்தஸ்து வழங்கியுள்ளது.
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர், 2015-ம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் ஜூலியஸ் யெகோ, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
செக் குடியரசின் மார்ட்டின் கோனெக்னி, பிரேசிலினின் லூயிஸ் மவுரிசியோ டா சில்வா, இலங்கையின் ருமேஷ் பதிரேஜ், போலந்தின் சைப்ரியன் மிர்சிக்லோட் ஆகியோரும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் இந்தியாவின் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங், ரோஹித் யாதவ், சாஹில் சில்வால் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதில் சச்சின் யாதவ் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 12 பேர் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை எறிய முயற்சி செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.