பெங்களூரு பெண் உதவி கலெக்டர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு

பெங்களூரு, ஜூலை 3. பணியில் அலட்சியமாக செயல்படுவதுடன், லஞ்ச புகாரிலும் சிக்கிய பெங்களூரு தெற்கு உதவி கலெக்டர் அபூர்வா பிடரி மீது வழக்கு பதிவு செய்ய, மண்டல கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., சங்கர் பிடரி. இவரது மகள் அபூர்வா பிடரி. கே.ஏ.எஸ்., எனும் கர்நாடக நிர்வாக பணி அதிகாரியான இவர், பெங்களூரு தெற்கு உதவி கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
‘பணிக்கு சரியாக வருவது இல்லை, நிலத் தகராறு தொடர்பாக நிலுவையில் இருக்கும் கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று, அபூர்வா மீது வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவுக்கு புகார்கள் சென்றன. கடந்த மாதம் 19ம் தேதி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அமைச்சர் சென்றார். அப்போது,
அபூர்வா பணிக்கு வந்துவிட்டு வெளியே சென்றது தெரிந்தது.
உதவி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருந்த மக்கள் மற்றும் விவசாயிகள், ‘அனைத்து பணிகளுக்கும் உதவி கலெக்டர் அபூர்வா லஞ்சம் கேட்பதாக புகார் கூறினர்.
இதனால், உதவி கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி,
வருவாய்த் துறையின் பெங்களூரு மண்டல கமிஷனர் அமலன் ஆதித்யா பிஸ்வாஸுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்நிலையில்,
அபூர்வா மீது போலீசில் புகார் அளித்து, லஞ்ச வழக்கு பதிவு செய்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு நகர கலெக்டர் ஜெகதீஷுக்கு, மண்டல கமிஷனர் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நேற்று அளித்த பேட்டி: வருவாய்த் துறையில் நன்கு பணி செய்யும் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களுக்கு உரிய கவுரவத்தை கொடுக்கிறோம். பணியில் அலட்சியமாக இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறோம். அதை பொருட்படுத்தாமல் திரும்ப, திரும்ப தவறு செய்யும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால்,
வருவாய்த் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விடும். அபூர்வா பிடரி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு இருப்பது, அலட்சியமாக செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.