
பெங்களூரு: ஏப்ரல் 30 –
பெங்களூரில் திடீரென பெய்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்தன பல இடங்களின் மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மரங்கள் விழுந்து நொறுங்கின.சாலைகளில் என்ன நடக்குமோ என்ற அச்சம் தற்போது பெங்களூரு நகர மக்களை வாட்டி வதைக்கிறது. லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்ட வாகனங்கள் சேதமடைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதோடு, கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நடக்க வேண்டிய ஒரு சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
நேற்று மாலை, பெங்களூரில் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியது. நகரத்தின் சாலைகள் ஆறுகள் போல மாறின, பல பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரண்டு மணி நேரம் பெய்த கனமழை நகரத்தைத் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் கொட்டிய பெருமழையில் ஐடி சிட்டி முற்றிலுமாக மூழ்கியது.
கீழ்ப்பாலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, அதேவேளையில் பல இடங்களில் கார்களும் இருசக்கர வாகனங்களும் சிக்கிக்கொண்டன. இன்று காலை பெங்களூரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முடங்கியது சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது அவைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது மீண்டும் மழை பெய்தால் இதுபோன்ற மரங்கள் விழுந்து ஆபத்து ஏற்படுமோ என்று மக்கள் பீதியில் உள்ளனர்.
3 நாள் மழை: வானிலை ஆய்வு மையம் மேலும் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், பெங்களூர் நகரவாசிகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. மழை பெய்து கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும் போது ஒரு வித மகிழ்ச்சி அடைய வேண்டிய மக்கள் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் அச்சத்தில் உள்ளனர். எனவே மழை பாதிப்பு ஏற்படும் முன் ஆபத்தான இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்களை கண்டறிந்து அவைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்


















