
சென்னை: மே 29-
சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 24 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டீசல் விலை நேற்று லிட்டருக்கு 43 காசுகள் குறைந்த நிலையில், இன்று 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.99.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 105 டாலராக வர்த்தமாகி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள இறக்குமதி செலவினங்களை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் மே 15ஆம் தேதி முதல் விலையேற்றத்தை தொடங்கின.
மே 15ஆம் தேதியன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.108.20க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் டீசல் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.99.98க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் சற்று குறைந்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.107.77க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலையும் லிட்டருக்கு 44 காசுகள் குறைந்து ரூ.99.55க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.108.01க்கும், டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் விலையேற்றத்தால், மற்ற பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.


















