பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைக்கடையில் கொள்ளை

புதுடெல்லி: ஜூலை 24 – பொம்மை துப்பாக்கியைக் கொண்டு டில்லி நகைக்கடையில் கொள்ளையடித்த பி.எஸ்.எப்., கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
டில்லியை சேர்ந்த 22 வயது எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.,) கான்ஸ்டபிள் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை ஆகி உள்ளார். இதனால், இவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்தார். இதையடுத்து, இவர் பண கஷ்டத்தில் தவித்து வந்துள்ளார். ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார்.
பின்னர் அவர் ரூ.2லட்சம் மதிப்பு உள்ள 4 தங்க வளையங்களை பறித்து சென்றார். இது குறித்து போலீசாருக்கு நகைக்கடை உரிமையாளர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். சி.சி.டி.வி., காட்சிகளில் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் போலீசார் ஒருவரை கைது செய்தனர். பொம்மை துப்பாக்கி முனையில் நகை பறித்தது மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியைச் சேர்ந்த கவுரவ் யாதவ் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. விசாரணையில், அவர் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவரது வீட்டிலிருந்து திருடப்பட்ட இரண்டு தங்க வளையல்களை போலீசார் மீட்டனர். விசாரணையின் போது கவுரவ் யாதவ், 2023ம் ஆண்டு பி.எஸ்.எப்.,பில் சேர்ந்ததாகவும், மே 2025ம் ஆண்டு தனது பயிற்சியை முடித்தார். அவர் பஞ்சாபின் பாசில்காவில் பணியமர்த்தப்பட்டார். அவரது பதவிக் காலத்தில், ஆன்லைன் சூதாட்ட தளங்களுக்கு அடிமையாகி, பணத்தை இழந்துள்ளார். டில்லியில் ஒரு கடையில் இருந்து ஒரு பொம்மைத் துப்பாக்கியை வாங்கி, கொள்ளையடிக்க முடிவு செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.